குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.
242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியது. விபத்தை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விமானத்தில் 169 இந்தியர்களும், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்களும், ஒரு கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கலை சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.







