ரஷ்யா – உக்ரைன் கைதிகள் பரிமாற்றத்திற்கு உடன்பாடு! – பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

ஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பாக கொள்கை அளவில் முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், பிராந்திய உரிமை, பாதுகாப்பு உத்தரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையே, அபுதாபியில் அமெரிக்கா மத்தியஸ்தத்தில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பாக கொள்கை அளவில் முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அபுதாபியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சுமார் ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் எந்தவிதமான முக்கிய உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தை கடினமானதாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளனர்.

மேலும், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மனிதாபிமான அடிப்படையிலான கைதிகள் விடுதலைக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார். கைதிகள் பரிமாற்றம் தொடர்பான இறுதி எண்ணிக்கை விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த முன்னேற்றத்தை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ளார். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அந்நாடுகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே பங்கேற்கும் தற்போதைய பேச்சுவார்த்தை நடைமுறையைத் தாண்டி, எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளையும் இணைக்க வேண்டும் என்பது உக்ரைனின் விருப்பமாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருவதால், அவற்றை நடுநிலையான பேச்சுவார்த்தைப் பங்கேற்பாளர்களாகக் கருத முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கத் தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் வியாழக்கிழமை மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்க உள்ளனர். அதன்பிறகு, அயர்லாந்தின் டப்ளின் நகருக்குச் சென்று பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் விளக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த புதின் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் ஐரோப்பிய நாடுகளுக்கு உரிய பங்கு இருக்க வேண்டும் என ஜெர்மனி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பாவின் எதிர்காலப் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பான முடிவுகளை ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்பு இல்லாமல் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

போர் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உக்ரைனின் பிராந்தியங்கள், அந்நாட்டுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் நேட்டோ அமைப்புடனான எதிர்கால உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ரஷ்யா – உக்ரைன் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.

இதனால், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் இன்னும் சவால்கள் நீடிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.