கயாடு லோகருக்கு பிறகு ‘STR 49’-ல் இணைந்த பிரபலம் – எகிறும் எதிர்பார்ப்பு!

‘STR 49’-ல் நடிகர் சந்தானம் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே அவர் பார்க்கிங் பட இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணனுடன் ஒரு படத்திலும், தேசிங்கு பெரியசாமியுடன் ஒரு படத்திலும் அஸ்வந்த் மாரிமுத்துவுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இதில் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் அவரது 49வது படமாக உருவாகி வருகிறது. அதே போல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு பணியாற்றும் படம் அவரது 50வது படமாக உருவாகிறது. அஸ்வந்த் மாரிமுத்துவுடன் கை கோர்த்துள்ள சிம்புவின் படம் அவருக்கு 51வது படமாக உருவாகி வருகிறது.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் சிம்புவின் 49வது படத்தில் முன்னதாக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து நடிகை கயாடு லோகர் அந்த படத்தில் இணைவதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் நடிகர் சந்தானம் இந்த படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து மன்மதன், வானம், வல்லவன், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவந்தனர். இதனால், தற்போது மீண்டும் சிம்புவின் 49 வது திரைப்படத்தில் சந்தானம் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.