71-வது உலக அழகி போட்டி 2023 இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறும் என மிஸ் வேர்ல்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்ட் ‘ உலக அழகிப் போட்டி 1996-ம் ஆண்டு நடைபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஐரீன் ஸ்கிலிவா பட்டம் வென்றார்.
இந்நிலையில் மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவரான ஜூலியா மோர்லி, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 71-வது உலக அழகிப்போட்டி இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறும். சுமார் 30 நாட்கள் நடைபெறும் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொள்ள உள்ளதாக அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற போலந்து நாட்டின் கரோலினா செய்தியாளர்களிடம் பேசினார். “உலக அழகி போட்டி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக அவர் இந்தியா வந்துள்ளார். அவர் கூறும்போது, “உலகிலேயே விருந்தோம்பலில் சிறந்த நாடு இந்தியா. இங்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். சொந்த வீட்டுக்கு வந்துள்ளதை போல் உணர்கிறேன். இந்தியாவின் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மிஸ் இந்தியா வேர்ல்ட்’ சினி ஷெட்டி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சகோதரிகளை சந்திப்பதற்கு உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். இந்த அருமையான பயணத்தில் நானும் உள்ளேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவேன்” என கூறினார்.





