முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

10 கேள்விகள்…மெகா கூட்டணி…அதிமுக கணக்கு…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

பாஜக, பாமகவை தவிர்த்துவிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் வலுவான மெகா கூட்டணியை அமைக்கமுடியுமா என்கிற விவாதம் தமிழக அரசியலில் எழுந்துள்ள நிலையில் அது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக 51ம் ஆண்டு தொடக்கவிழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அக்கட்சியில் இருக்கும் கட்சிகள்போக புதிதாக சில கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர இபிஎஸ் முயற்சிக்கிறார் என உணர்த்துவது போலவே அவரது பேச்சு அமைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், பாஜகவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், பாமகவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பேசிய பேச்சுக்கள், ஏற்கனவே தங்கள் கூட்டணியில் உள்ள பாஜக, பாமகவை அதிமுக தக்கவைக்குமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் பாஜக, பாமக இடம்பெறாத ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் எண்ணத்தில் அதிமுக உள்ளதா என்கிற விவாதங்களும் தமிழக அரசியலில் எழுந்துள்ளன. இந்நிலையில் பாஜக, பாமக அல்லாத மெகா கூட்டணியை அதிமுக அமைக்க சாத்தியமிருக்கிறதா என்பதை கடந்த காலதேர்தல் களை ஒப்பிட்டு ஆராய வேண்டியுள்ளது. இதற்காக 10 கேள்விகளை எழுப்பி அதற்கு விடை காண்போம்.

1) கடந்த காலங்களில் அதிமுக அமைத்த மெகா கூட்டணிகளில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் இடம்பெற்றன?

2)பாஜக, பாமகவை தவிர்த்துவிட்டு அதிமுகவால் மெகா கூட்டணி அமைக்க சாத்தியமா?

3) அப்படி பாமக, பாஜக அல்லாத மெகா கூட்டணியை அதிமுக அமைத்தால் அந்த கூட்டணி எந்தெந்த கட்சிகளுடன் அமைய வாய்ப்பு இருக்கிறது?

3) பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மெகா கூட்டணி அமைக்குமா பாஜக?

5) கூட்டணியில் பாமக, பாஜக இணைந்திருந்தபோது அதிமுக பெற்ற வெற்றிகளின் அளவு என்ன?

6) பாமக, பாஜக கூட்டணியில் இல்லாதபோது அதிமுக பெற்ற வெற்றிகளின் அளவு என்ன?

7) பாமக. பாஜக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றை மட்டும் கூட்டணியில் வைத்திருந்தபோது அதிமுக பெற்ற வெற்றிகளின் அளவு என்ன?

8) அதிமுக தனித்து நின்றபோதும் மெகா கூட்டணி அமைத்தபோதும் பெற்ற வெற்றிகளின் விகிதாச்சார வேறுபாடு என்ன?

9) கூட்டணி மாற்றங்கள் நிகழ்த்தியபோது அது கடந்த கால தேர்தல்களில் அதிமுகவிற்கு கைகொடுத்ததா?

10)  கடந்த காலங்களில் கூட்டணி தொடர்ந்தபோது அதிமுகவின் வெற்றியோ அல்லது தோல்வியோ தொடர்ந்திருக்கிறதா?

கடந்த காலங்களில் அதிமுக சந்தித்த தேர்தல்களின் முடிவுகளை வைத்து மேற்கண்ட 10 கேள்விகளையும் அலசுவோம்.  எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்த பிறகு உருவான புதிய சகாப்தத்தில் அதிமுக 9 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 7 சட்டப்பேரவை தேர்தல்களை அக்கட்சி எதிர்கொண்டுள்ளது. இந்த 16 தேர்தல்களில் தொகுதி பங்கீடு அளவில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை  7 முறை அதிமுக அமைத்துள்ளது. 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 6 கட்சிகளை அடங்கிய கூட்டணியையும், 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 11 கட்சிகளைக் கொண்ட கூட்டணியையும் அமைத்தது. 2006ம் ஆண்டுசட்டப்பேரவைத் தேர்தலில்  9 கட்சிகளைக் கொண்ட கூட்டணியை ஒருங்கிணைத்த அதிமுக,   2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 5 கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்கியது.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிய நிலையில் அதில் மொத்தம் 11 கட்சிகள் இடம்பெற்றன.  2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 7 கட்சிகளைக்கொண்ட கூட்டணியை  அதிமுக உருவாக்கியது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணியில் மொத்தம் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதுவரை அதிமுக அமைத்த மெகா கூட்டணிகளிலேயே 11 கட்சிகளை ஒருங்கிணைத்ததுதான் உச்சபட்சமாக உள்ளது.

தமிழகத்தில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்திற்கு வந்த பின்னர் கடந்த 34  ஆண்டுகளில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுக மொத்தம் சந்தித்த 16 தேர்தல்களில் 8 தேர்தல்களில் அக்கட்சி அதிக இடங்களில் வென்று வெற்றி வாகை சூடியிருக்கிறது.   இதில் 5க்கும் குறைவான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அல்லது தனித்து நிற்கும்போது  1989 நாடாளுமன்ற தேர்தல், 1991 நாடாளுமன்ற தேர்தல், 1991 சட்டமன்ற தேர்தல், 2014 நாடாளுமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல் (இந்த தேர்தலில் 6 சிறிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தாலும், 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னமே களம் இறங்கியதால் அதிமுக தனித்து நின்றதாகவே கருத வேண்டியுள்ளது)  என 5 தேர்தல்களில் அதிமுக வெற்றி வாகை சூடியுள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளுடன் இணைந்து அதிமுக மெகா கூட்டணி அமைத்தபோது  1998 நாடாளுமன்ற தேர்தல், 2001 சட்டமன்ற தேர்தல், 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என   3 தேர்தல்களிலேயே வெற்றி வாகை சூடியுள்ளது.   2006 சட்டமன்ற தேர்தல், 2009 நாடாளுமன்ற தேர்தல், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் மெகா கூட்டணி அமைத்தும் அதிமுகவால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.

தற்போது பாமக, பாஜகவுடனான அதிமுக கூட்டணி விஷயத்திற்கு வருவோம். பாமகவும், பாஜகவும் ஒரே நேரத்தில் 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதுதான் முதன் முதலாக அதிமுகவுடனான கூட்டணிக்கு வந்தன. 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என மூன்று தேர்தல்களில், பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. இந்த 3 தேர்தல்களில் 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. 39 இடங்களில் 30 இடங்களில் அதிமுக கூட்டணி வென்றது. பாமக 4 மக்களவை தொகுதிகளிலும், பாஜக 3 மக்களவை தொகுதிகளிலும் வென்றன. 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மொத்தம் உள்ள 39 இடங்களில் ஒரு இடமே கிடைத்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது அதிமுக.

பாமக, பாஜக, ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெறாமல், தனித்தனியாக அக்கூட்டணியில் இடம்பெற்றபோது கிடைத்த வெற்றி, தோல்விகளை பற்றி ஆராய்வதும் இந்த நேரத்தில் அவசியம். பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெறாதபோது பாமக அதிமுக கூட்டணியில் 2001 நாடாளுமன்ற தேர்தலிலும், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் இடம்பெற்றது. இதில் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அதிமுக 132 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பாமக 20 இடங்களை கைப்பற்றியது. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாமக அதிக அளவிலான எம்.எல்.ஏக்களைப் பெற்றது இந்த தேர்தலில்தான். இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களில் விட்டுக்கொடுத்து 140  இடங்களிலேயே போட்டியிட்ட அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு 31.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. 27 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளை கைப்பற்றிய பாமக 5.6 சதவீத வாக்குகளை பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அக்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்கள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டன. அதிமுக 23 இடங்களிலும், பாமக 6 இடங்களிலும் போட்டியிட்டன.  இதில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. பாமக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அதிமுகவிற்கு 22.9 சதவீத வாக்குகள் கிடைத்தன. பாமக 6.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

பாமக இடம்பெறாதபோது அதிமுக கூட்டணியில் பாஜக ஒரே ஒரு முறைமட்டுமே இடம்பெற்றுள்ளது. அது 2004 நாடாளுமன்ற தேர்தல். அந்த தேர்தலில் அதிமுக 33 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் களம் இறங்கின. இதில் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு இடத்தைக்கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்தது. அதிமுக 29.8 சதவீத வாக்குகளையும், பாஜக 5.1 சதவீத வாக்குகளையும் பெற்றன.

மொத்தத்தில் கடந்த தேர்தல்களை வைத்துப் பார்க்கும்போது, பாஜக, பாமக அல்லாமல் மெகா கூட்டணியை அமைத்து வெற்றிபெற முடியும் என அதிமுக நிரூபித்துள்ளது தெரியவருகிறது. மேலும் 1996க்கு பின்னர் அதிமுக வென்ற தேர்தல்கள் எல்லாம் கூட்டணி விஷயத்தில் பெரிய மாறுபாடுகளை செய்து அக்கட்சி களம் இறங்கிய தேர்தல்களாகவே உள்ளன. கடந்த 34 ஆண்டுகளில் நடைபெற்ற 16 தேர்தல்களில் அதிமுக கூட்டணி 8 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் 6 தேர்தல் வெற்றிகள் பாமகவும், பாஜகவும் கூட்டணியில் இடம்பெறாதபோது கிடைத்தவைதான். அந்த 6 தேர்தல்களில் 4 தேர்தல்களில் அதிமுக அமைத்த வெற்றிக் கூட்டணியில் காங்கிரசோ அல்லது, இடதுசாரிகள், தேமுதிக போன்ற கட்சிகளோ இடம்பெற்றுள்ளன. எனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மநீம,  போன்ற கட்சிகளை இணைத்து அதிமுக மெகா கூட்டணியை அமைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நிலவும் சூழலே வேறு. உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதே அக்கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது. இந்நிலையில் உட்கட்சி பிரச்சினைகளிலிருந்து மீண்டு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் போன்றவற்றை தங்கள் பக்கம் இழுக்கும் அளவிற்கு தமிழகத்தின் அரசியல் சூழல்களை அதிமுக மாற்றுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக அத்தகைய நம்பிக்கையை ஊட்டுமா, திமுக கூட்டணி பக்கம் உள்ள கட்சிகள் அதிமுக பக்கம் வருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுகவில் உள்ள பிளவுகள் நீங்கி இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் அணிகள் ஒன்றாக இணைந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான மெகா கூட்டணியை அதிமுக அமைப்பது எளிதாக இருக்கு என்கிற கருத்தும் நிலவுகிறது.

-எஸ்.இலட்சுமணன் 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆகஸ்ட் 14- பிரிவினை கொடுந்துயர நினைவு தினம்

Halley Karthik

தொல்லியல் துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

Halley Karthik

மாணவி சத்தியாவின் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

EZHILARASAN D