இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல் நலக்குறைவின் காரணமாகச் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் அவரது நடிப்பும் பல்வேறு ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இன்று காலை திடீர் உடல் நலக்குறைவின் காரணமாகச் சென்னை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நிலையைச் சோதித்துப் பார்த்ததில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இயக்குனர் பாரதிராஜா நலமுடன் இருப்பதாகவும் சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்புவார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பாரதிராஜா இளம் கதாநாயகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் திரைத்துறையில் பயணிக்கும் இவர் பல படங்களை இயக்கி உள்ளார். இவரின் படத்தில் நடித்ததன் மூலம் பல உச்ச நட்சத்திரங்களின் திரை வாழ்க்கை மிகப்பெரிய திருப்புமுனையை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜா நலம்பெற்று வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







