ஆதித்யா விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை இரண்டாம் கட்டமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது, தொடர்ந்து, புவியின் சுற்றுவட்டப்பாதையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலைநிறுத்தினர்.
பின்னர், ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டப் பாதையின் உயரம் 245 கிலோமீட்டர் மற்றும் 22 ஆயிரத்து 459 கிலோமீட்டர் என்ற அளவில் நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், ஆதித்யா விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை இன்று அதிகாலை 3 மணிக்கு இரண்டாம் கட்டமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 282 கிலோமீட்டர் அருகிலும், 40 ஆயிரத்து 225 கிலோமீட்டர் தொலைவிலும் ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது. புவியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டபோது, மொரீஷியஸ், பெங்களூரு மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக வரும் 10ம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட உள்ளது.
https://twitter.com/isro/status/1698810887614992515?t=Cxm9GZWULqThleXv-KqSbg&s=09







