பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பக்தர்கள் நலனில் அலட்சியம் காட்டிய தவெக அரசு. வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு போதிய வசதிகளை தவெக அரசு ஏற்படுத்தித் தராததால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் மயங்கியதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்து விரோத திமுக ஆட்சியின் அலட்சியத்தால் பழனி, திருச்செந்தூர் போன்ற திருத்தலங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த கொடூரம் தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடராமல் இருப்பதை முதல்வர் திரு. விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அனைவருக்குமான அரசு என்று முழங்குவதோடு நிற்காது, இந்து திருக்கோவில்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பல பக்தர்கள் மயங்கி விழுந்த இந்தக் கோர நிகழ்வுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள் உடனடியாகத் தார்மீகப் பொறுப்பேற்று, இனியாவது தமிழகத் திருக்கோவில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, பக்தர்கள் நலனைக் காப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







