பங்குகள் மீதான ரூ. 9,203 கோடி கடன்களை முன்கூட்டியே செலுத்த அதானி குழுமம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 24-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை அதாவது 74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது, அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கியுள்ளது எனவும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட எந்தத் திட்டமாக இருந்தாலும், வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு தான் நிறைவேற்றப்படுகிறது. அதானிக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை எனத் தெரிவித்தார்.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், அதானி குழுமம், பங்குகளுக்கு எதிரான கடன்களை முழுமையாகத் திரும்பச் செலுத்த திட்டமிடுவதாகவும், இந்தத் தொகையை அடுத்த 30 – 45 நாட்களில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பங்குகளுக்கு எதிரான கடன்களை முன்கூட்டியே செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தினைப் போக்கும் என்றும், அதானி குழுமத்தின் மீது குறைந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், 9,203 கோடி கடன்களை முன்கூட்டியே செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, ETயில் வெளியான அறிக்கை ஒன்றில் இரண்டு அதானி நிறுவனங்களின் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இதில் அதானி போட்ஸ் & செஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட இரு நிறுவனங்களும் அடங்கும். இருப்பினும், இகுறித்து பங்குச் சந்தைக்கு இதுவரையில் எந்த அறிவிப்பு ம் தாக்கல் செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் நிலையில் இதுகுறித்த முழு விவரங்கள் தெரியவரலாம்.
ம.பவித்ரா









