லியோ திரைப்படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் நடிகை திரிஷா புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணைவதால் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷமீர் சென்றது. விஜய், இயக்குநர் லோகேஷ் கனகரஜ், திரிஷா மற்றும் பல நடிகர்கள் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதுமட்டுமல்லாமல் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷா இணைந்து நடிப்பதால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் திரிஷா சென்னை வந்ததாக கூறி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து லியோ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டார் என்ற தகவல்கள் பரவ தொடங்கின. ஆனால் திரிஷா தற்போது புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் காஷ்மீர் எனக் குறிப்பிட்டுள்ளார். பனி படர்ந்துள்ள காஷ்மீரை விமானத்திலிருந்து படம்பிடித்தது போல் அந்த வீடியோ உள்ளது.







