குடியிருப்போர் சங்க நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக பிரபல இந்தி நடிகை பாயல் ரோத்தகி கைது செய்யப்பட்டார்.
பிரபல இந்தி நடிகை பாயல் ரோத்தகி (Payal Rohtagi). இவர் ரெபியூஜி, தும்சே மில்கர், 36 சைனா டவுண், கார்ப்பரேட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் அகமதாபாத்தில் உள்ள சாட்டிலைட் ஏரியாவில் வசித்து வருகிறார். இங்குள்ள குடியிருப்போர் சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி நடந்தது. சங்கத்தில் உறுப்பினராக இல்லாத நடிகை பாயலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இருந்தாலும் அவரை கூட்டத்தில் ஏதும் பேசக்கூடாது என்று சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த அவர், ஏன் பேசக்கூடாது என்று கூறி, சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசினாராம். குழந்தைகள், சொசைட்டியின் மையப் பகுதியில் விளையாடினால், கால்களை உடைப்பதாக எச்சரித்தாராம். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிய நடிகை பாயல், ட்விட்டரிலும் கடுமையாக திட்டி பதிவிட்டார். இதையடுத்து சொசைட்டி நிர்வாகிகள் அகமதாபாத் போலீசில் பாயல் குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து நடிகை பாயல் ரோத்தகியை போலீசார் கைது செய்தனர்.
நடிகை பாயல் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் ஏற்கனவே நேரு குடும்பம் குறித்து அவதூறான கருத்தை கொண்ட வீடியோ வெளியிட்டதற்காக, ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.







