நடிகை புகார் – குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மைனா, தலைவா உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அமலாபால்.…

தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மைனா, தலைவா உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அமலாபால். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த‘டாஸ்லின் தமிழச்சி’ என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் ‘மான்ஜான்ஸ்’ டான்ஸ் பயிற்சி அகடாமியில் பயிற்சி எடுத்தார்.

அப்போது, அழகேசன் என்பவர் அமலாபாலிடம், மலேசியா செல்லும்போது இப்ராகிம் என்பவருடன் இரவு உணவு அருந்த வேண்டும் என்று பேசியுள்ளார். இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், தி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராகிம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், இந்த வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.