லைகா நிறுவனத்திடம் பெற்ற ரூ.21 கோடி திருப்பி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலுக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தான் நடத்தி வரும் விஷால் பிலிம் பேக்ட்ரி எனும் பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ்லில் சுமார் 21கோடியே 29லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றார். நீண்ட நாட்களாகியும் கடனை திரும்ப செலுத்தாததால் அக்கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடாக கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தும் வரை விஷால் தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கும் அத்தனை படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில் அந்த ஒப்பந்ததை மீறி விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம்
வெளியிடப்பட்டதாக கூறி லைகா நிறுவனம் விஷால் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் நடிகர் விஷாலை 15கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டுருந்தது.
இதனை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கிலும் தனி நீதிபதியின் உத்தரவையே இரு நீதிபதிகள் உள்ளடக்கிய அமர்வும் உறுதி செய்தது.மேலும் தொகையை செலுத்த தவறினால் விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கிலோ,ஓடிடியிலோ வெளியிடக்கூடாது என தடை விதித்திருந்தது.இந்நிலையில் விஷால் இதனை மீறியுள்ளதாகவும், தற்போது வரை 15கோடியை செலுத்தவில்லை எனவும் கூறி லைகா நிறுவனம் விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சௌந்தர் இவ்வழக்கில் விஷால் இதுவரை எவ்வித படமும் தயாரிக்கவில்லை எனக்கூறி விஷாலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை
தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் இவ்வழக்கில் பிரதான குற்றசாட்டுகள் வருகிற 26ம் தேதி பதிவு செய்யப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
வேந்தன்







