தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார்.
ஜேசன் சஞ்சய், டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் (2018-2020) ஃபிலிம் புரொடக்ஷனில் டிப்ளமோ முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 2020-2022 காலக்கட்டத்தில் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
லைகா தயாரிப்பு நிறுவனம் தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களைத் தயாரித்திருக்கிறது. நடிகர் விஜய் தயாரித்த கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது தயாரிப்புப் பணியைத் தொடங்கியது.
https://twitter.com/LycaProductions/status/1696092773978714498
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக லைகா தயாரிப்பு நிறுவனம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை தாங்கள் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த படம் குறித்து அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம், ஜேசன் சஞ்சய் சொன்ன கதை சுவாரஸ்யமாக இருந்தது எனவும், படத்தில் பணிபுரியும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.







