லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்தது. தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசம் சென்றார். இந்நிலையில், இன்று உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துள்ளனர். இதனை அடுத்து லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.







