34.5 C
Chennai
May 26, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு

ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது குறித்து வெற்றி மாறன் பேசிய கருத்துக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும் என்று பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் கருணாசும் வெற்றிமாறன் கருத்துக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றிமாறன் கருத்து மிக உண்மையானது. சரியானது! ராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

 

இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை! அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் உருவாகிறது.


காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது தெய்வக்குரல் நூலில்.. “நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று நம்மை ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம் என்றார்” அந்தப் பிழைத்துக் கொண்டோம் என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள் என சாடியுள்ளார். ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும் அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும். அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது.

 

தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம்.. எதையெல்லாம் காவியாக்க முடியுமே அதையெல்லாம் மாற்றமுற்படுவார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும். வந்துகொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச்சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வை அடையவேண்டும். இந்தியாவை ‘பாரத்’, ‘பாரத் வர்ஷா” என்று மாற்றுவதற்குரிய சட்ட வேலைகளை பா.ஜ.க.முன்னெடுக்கிறது.. மிகவிரைவில் இந்தியா பாரத் ஆக மாறும். இந்து மதம் என்னவாக மாறும் என்பதும் அவர்கள் மனுதர்மபடிதான் நடக்கும்.

 

எனவே, நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். கலை மக்களுக்கானது. கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading