இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெகுஜன சினிமா ரசிகர்களை தன்வசம் கட்டிப் போட்ட ஒரு இயக்குநர் இடம்பெறுவார். அந்தவகையில் 90-களில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் பல்வேறு பிரம்மாண்டங்களை நிகழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் இயக்குநர் ஷங்கர், இன்று (ஆகஸ்ட் 17) தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1993-ஆம் வருடம் ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோ நடித்திருந்தனர். வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின.
முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஷங்கர் அதனை தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 ஆகிய திரைப்படங்கள் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் குவித்து வியக்க வைத்த திரைபடங்களில் பெரும் பங்கு வகித்தவர் இயக்குனர் சங்கர் ஆவார்.
‘2.0’ படத்துக்குப் பிறகு ராம்சரணை வைத்து ‘கேம்சேஞ்சர்’ என்ற பெயரில் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார். திரையுலகில் மூன்று தசாப்தங்களாக ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்ப திரைப்படங்களை வழங்கி இந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஷங்கருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/ikamalhaasan/status/1692137957233172683
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர்கள் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.







