பார்த்திபனின் ஆங்கிரியான ஆஸ்கர் சாகசங்கள்!

தன்னுடைய இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை துக்கி வீசி புதியதொரு சர்ச்சை சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர், நடிகர் பார்த்திபன். பார்த்திபன் மேடைகளில் ஏறினாலே சர்வநிச்சயமாக ஏதேனும் ஒரு சம்பவத்தை செய்துவிட்டுத்தான் கீழிறங்குவார்.…

தன்னுடைய இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை துக்கி வீசி புதியதொரு சர்ச்சை சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர், நடிகர் பார்த்திபன்.

பார்த்திபன் மேடைகளில் ஏறினாலே சர்வநிச்சயமாக ஏதேனும் ஒரு சம்பவத்தை செய்துவிட்டுத்தான் கீழிறங்குவார். வழக்கமாக மைக்கை பிடித்து வார்த்தைளைக் கொண்டே போர் தொடுக்கும் பார்த்திபன், இப்போது அந்த மைக்கையே தூக்கி வீசி வெகுண்டெழுந்துள்ளார். Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் எனும் வரலாற்று சாதனையை தாங்கிக்கொண்டு திரைக்கு வர தயாராகிவருகிறது பார்த்திபனின் ‘இரவின் நிழல்’. இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படத்துடைய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அருகில் அமரவைத்துக்கொண்டு பார்த்திபன் செய்த சம்பவம் தான் இணையத்தின் இன்றைய ‘ஹாட் டாபிக்.’

இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தில் பானபத்திர ஓனாண்டி, புலிக்கேசியை பாராட்டி பாடும் காட்சிகளை நம்மால் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. பார்த்திபனும் அதே பாணியில் தான் மேடைக்கு மேடை சக கலைஞர்களை சம்பவம் செய்வார். அவருடைய பேச்சின் தொடக்கம் திட்டுவது போலவோ அல்லது விமர்சனம் செய்வது போலவோ அமைந்தாலும், சட்டென தன்னுடைய வார்த்தை ஜாலத்தால் ‘யூ டர்ன்’ போட்டு பாராட்டி முடிப்பதே அவரின் தனிச்சிறப்பு!

இரவின் நிழல் டீஸர் வெளியீட்டின் போது, “எப்படி ஆரம்பிக்கருதுன்னே தெரியல இந்த பாடல எப்படி வெளியிடலாம்” என்று ரகுமானை பார்த்து பார்த்திபன் கேட்க. “ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காங்க, ட்ராமாலாம் வேணாம் அப்படியே போயிடலாம்” என்று பதிலளித்தார் ரகுமான். அதற்கு, பார்த்திபன் எதையோ சொல்ல வர, மைக் வேலை செய்யாமல் போனது. சட்டென சந்திரமுகியாக மாறியவர், இருக்கையில் இருந்து ஆவேசமாக எழுந்து சென்றார். ஆயிரத்தில் ஒருவனில் வரும் சோழ மன்னனை போல மேடையில் இருந்து எகிறி குதித்து ஒரு ருத்ர தாண்டம் ஆடிவிடுவாரோ என அனைவரும் பதறிப்போனார்கள். ஆனால் பார்த்திபனோ‘இதை முதல்லையே சொல்ல வேண்டியதானே!’ என்று கொதித்துகொண்டே மைக்கை தூக்கி கீழே வீசினார். அவரின் இந்த சாகசத்தின் போது, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த ரியாக்‌ஷன்கள் அனைத்தும் இந்த மாதத்திற்கான மீம் மெட்டீரியல் ஆகிவிடும் என்பது நம் கணிப்பு.

இதன் பிறகு இன்னொரு மைக்கை வாங்கிக் கொண்டு பார்த்திபன் அமர ,மைக் செக் 123 என்று சரிபார்க்கப்பட்டது. இதற்கிடையில் சந்திரமுகி பங்களாவில் நுழைந்த வடிவேல் போல், நேரான பொஷிஷனில் அமர்ந்திருந்தார் ரகுமாரன். மீண்டும் பேச ஆரம்பித்த பார்த்திபன், “இந்த படத்தோட முக்கால் புகழும் உங்களுக்கே சார்” என்று முக்காப்புல்லா நாயகனான ஏ.ஆர்.ரகுமானிடம் சொன்னார். அடுத்தப்படியாக , ‘எப்படா உங்கக்கூட வேலை செய்யலாம்ன்னு கடந்த 20 வருஷத்துக்கு மேல ட்ரை பண்ணிட்டிருக்கேன். எப்ப வந்தாலும் எதுனா காரணம் சொல்லி மறுக்கப்பட்டுட்டே இருக்கும்’ என்று பார்த்திபன் சொல்லி முடிப்பதற்குள், ‘அப்போதான் லண்டன் , அமெரிக்கான்னு வேற ப்ரோஜக்ட்ல சுத்தி வேலை பாத்திட்டிருந்தேன்னு’ ரகுமான் பதிலளித்தார். இதையடுத்து பேசிய பார்த்திபன், ‘நான் உங்கள பத்தி யோசிச்சிட்டிருந்தா, என்ன பத்தி யாரு கவலைப்படுவா? நான் கவலைப்படுறதுக்கு எனக்கு எதுனா காரணம் வேணுமே! என்று சிரித்துக்கொண்டே பதலளித்தார்.

மேலும், ‘இந்த கதைய கேட்டதுமே உங்களுக்கு என்ன தோனிச்சின்னு’ பார்த்திபன் கேட்க, ‘இந்த ஐடியா நீங்க சொல்லும் போது பைத்தியக்காரத்தனமா இருந்தது’ என்று பார்த்திபன் ஸ்டைலிலே சடாரென பதிலளித்தார் ரஹ்மான். பின்பு, ஏதோ பண்ண போறீங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ நல்லா பண்ண போறீங்கன்னு தெரியாது’ என்று பாராட்டி முடித்தார் ரஹ்மான். இதன்பிறகு மாறி மாறி பாராட்டிக்கொண்டவுடன் மேடையில் இருக்கும் மைக் அருகில் வந்து நின்னார் பார்த்திபன். ‘மைக்கை தூக்கிப்போட்டு கத்துனது அநாகரீகமான செயல், மன்னிச்சிடுங்க நான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்’ என்று விழாவை சுமூகமாக முடித்தார்.

தன்னுடைய ஒத்த செருப்பு படத்தின் போதும் இதுபோல் பல உணர்ச்சிமயமான சம்பவங்கள் செய்துள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது போல், ஒத்த செருப்பு single நடிகரை மட்டும் வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

நிற்க, ஹாலிவுட்டில் டாம் ஹேங்கின் ‘Cast Away’ என்று ஒரு படம் இருக்கும். விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த விமானத்தில் இருந்து ஒருவர் மட்டும் தப்பித்துவிடுவார். அருகில் இருக்கும் தீவில் தஞ்சமடையும் அவர், அங்கிருந்து வெளியேற வழியின்றி அதே தீவில் தனியாளாக ஆண்டுக்கணக்கில் ‘சர்வைவ்’ செய்வதுதான் படத்தின் கதைக்கரு. உண்மையில் இந்த படத்தை அந்த ஒரு கதாப்பாத்திரத்தைக் கொண்டு மட்டுமே எடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் அதை விரும்பியிருக்கமாட்டார். தீவில் கதாநாயகனின் ‘சர்வைவலோடு’ படத்தை சுருக்காமல், கதாநாயகன் ‘chuck’ என்பவன் யார், அந்த தீவிலிருந்து தப்பித்த பின்பும் குடும்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன போன்ற பல எமோஷன்களை கொண்டு அப்படத்தை அழகுபடுத்தியிருப்பார்.

இப்போது ஒத்த செருப்புக்கு வருவோம், ஒரே கேரக்டரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால், உண்மையில் அந்த கதைக்கு ஒரே கேரக்டர் தான் தேவைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒத்த செருப்பில் பல கேரக்டர்கள் வந்த போதிலும், கேமிராவை பார்த்தின் முன்பு மட்டும் வைத்து விட்டு, இது ஒரே கேரக்டரைக்கொண்டு எடுக்கப்பட்ட உலகப்படம் என்று பரப்புரை செய்யப்பட்டது. படத்தில் அத்தனை கேரக்டர்கள் இருந்தும் ஆடியன்ஸ் ஏன் பார்த்திபனை மட்டும் திரையில் பார்க்கும் தண்டணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும், போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதே குற்றச்சாட்டுகளை முன் வைத்து அப்படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்களும் வந்திருந்தன.

இந்நிலையில், இப்படம் ஆஸ்கர் விருதுக்கான Eligible லிஸ்டில் இடம்பெற்று விமர்சகர்களை வாயடைக்க செய்தாலும், ‘என்னதான் இருந்தாலும் எப்படி ஒரே ஆள ஒன்னரை மணி நேரம் பாக்குறது’என்கிற நியாயமான கேள்விகள் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனியார் ஊடகம் நடத்திய விருது வழங்கும் விழா மேடையேறிய பார்த்திபன், ‘எங்கிட்ட 2 தேசிய விருது இருக்கு, ஆனா இதுவரை எனக்கு விகடன் விருது வழங்கப்படலை. என்னோட ஒத்த செருப்பு ஆஸ்கருக்கான Eligible லிஸ்டில் இடம்பெற்றும், விகடன் விருது பட்டியல்ல இடம்பெறல. ஒத்தசெருப்ப விட சிறந்த படம் எடுக்க முடியுமான்னு தெரியல, இனிமே விகடன் விருது பெற விருப்பம் இல்ல’ என்று கூறி மாஸாக மேடையை விட்டு கீழிறங்கினார் பார்த்திபன்.

இந்நிலையில் ஸ்பெஷல் ஜூரி பிரிவில் ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருதே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஆடியோகிராபிக்கான விருது உட்பட இரண்டு தேசிய விருதுகளை அள்ளியது இப்படம். இதே ஆண்டில் தனுஷ் மற்றும் இந்தி நடிகரான மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. விருது வாங்கிய மனோஜ் பாஜ்பாயுடன் எடுத்த போட்டோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பார்த்திபன், சிறந்த நடிகருக்கான விருது பெற்றவருடன்..பெறாதவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக தனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காமல் போன ஆதங்கத்திலேயே பார்த்திபன் அவ்வாறு குறிப்பிட்டதாகவே புரிந்துகொள்ளப்பட்டது.

இரண்டு தேசிய விருதுகள் கொடுத்தும் இவ்ளோ ‘கம்ப்ளைண்டா?’ என இணையவாசிகள் மீம்ஸ்களை பரக்கவிட்டனர். இதனைத்தொடர்ந்து தான் அந்த அர்த்தத்தில் அப்படி ட்வீட் போடவில்லை எனவும் அவர் விளக்கம் குடுத்திருந்தார்.

மேலும் ஆஸ்கருக்கான Eligible லிஸ்டில் இடம்பெற்ற ஒத்த செருப்பு, ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இடம்பெறாமல் போனது. இதனைத்தொடர்ந்து தான் பேசும் பேச்சுக்களில், போடும் ட்வீட்டுக்களில் ‘ஒத்த செருப்பு’ எனும் பெயரை இஷ்டத்துக்கும் தெளித்துவிட்டார் பார்த்திபன். ஆஸ்கர் அவார்டு கொடுக்கும் வரை பார்த்திபன் ஓயப்போவதில்லை, எனவே அவருக்கு ‘ஆஸ்கர் அவார்ட் குடுங்க ட்ரம்பே’ என்கிற மீம்ஸ்களையும் இணையவாசிகள் கலந்தடித்தனர்.

இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் டீஸர் வெளியீட்டின் போதே மேடையிலிருந்து மைக்கை தூக்கியெறிந்துள்ள சம்பவத்தை பார்த்தவர்கள், ‘பாத்தியா அண்ணன் இங்கையே ஆரம்பிச்சிட்டாரு’ என கலாய்த்துவருகின்றனர். ட்ரம்பால் கைவிடப்பட்ட இந்த பொறுப்பை, இரவின் நிழல் மூலம் ‘ஜோ பைடன்’ தான் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கோரிவருகின்றனர். இத்தாலியை சேர்ந்த ஓவியர் ஒரு காலி கண்ணாடி பெட்டை வைத்து அதில் கண்ணுக்கே தெரியாத ஓவியம் இருப்பதாகக்குறி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்ட சம்பவத்தை நீங்கள் படித்திருக்கக்கூடம்.

எதுவுமே இல்லாததைக்கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டதாக அதன் வடிவமைப்பாளர் குறிப்பிட்டிருந்தார். அதுபோல, யாருமே இயக்காத, யாருமே நடிக்காத, ஒரு Invisible Movie-ஐ எடுக்கும் முயற்சியில் கூட பார்த்திபன் இறங்கக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. திரையில் ‘புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும், உயிரை கொள்ளும்’ எனும் கார்டு முடிந்தவுடன் 3 மணி நேரம்( பார்த்திபன் மனது வைத்தால் 2 மணி நேரம்) வெள்ளை திரையில் எதுவுமற்ற அந்த Invisible Movie-ஐ காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அதற்குள் ஆவன செய்யுமா ஆஸ்கர் கமிட்டி!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.