நெல்லையில் நடிகர் தனுஷ் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இயக்குநர் செல்வராகவன் மூலம் துள்ளுவதோ இளமை படம் மூலம் 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் தனுஷ். அடுத்தடுத்து வெளியான காதல் கொண்டேன், திருடா திருடி உள்ளிட்ட படங்களும் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் நடிகர் தனுஷ். அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மயக்கம் என்ன திரைப்படத்தில் அவர் பிறைத் தேடும் இரவிலே, ஓட ஓட மற்றும் காதல் என் காதல் என மூன்று பாடல்கள் எழுதி பாடினார். அவர் எழுதிப் பாடிய ஒய் திஸ் கொலவெறி மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று 40- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி நெல்லை, தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் நெல்லை ராம்முத்துராம் திரையரங்கில் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்பட்டது. அதனை கண்டு ரசித்த ரசிகர்கள், கேக் வெட்டி தனுஷின் பிறந்தநாளை ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.







