“தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 2019ம் ஆண்டு 1,144 குற்றங்கள் நடந்திருந்தன. 2020ம் ஆண்டில் 1,274 வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ்ந்தன. 2021இல் தலித் மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்திருக்கிறது.
2021இல் தமிழ்நாட்டில் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61 தலித்துகளைக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளில் 2020ஆம் ஆண்டில் 1274 வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ்ந்தன. 2021 இல் தலித் மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்கள் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்திருக்கிறது.
2021இல் தமிழ்நாட்டில் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61 தலித்துகளைக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளில் 2020 ஆம் ஆண்டு 5வது இடத்தை வகித்த தமிழ்நாடு இப்போது 7வது இடத்தில் இருக்கிறது.
தலித் பெண்கள் மீதான தாக்குதலில் துன்புறுத்துவது, கண்ணியக் குறைவாக நடத்துவது போன்ற குற்றங்களை விடவும் தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவது தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில் 123 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்தது. அதில் 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர். தலித் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்களில் இந்தியாவிலேயே 5ஆவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. 2021ஆம் ஆண்டிலும் 123 பேர் கற்பழிக்கப்பட்டதாகவும் அதில் 89 பேர் சிறுமியர் என்றும் என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது.
தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல் துறை மெத்தனமாக இருப்பது என்சிஆர்பி அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2020 இல் பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டின் இறுதிவரை புலன் விசாரணை செய்யப்படாமல் இருந்த வன்கொடுமை வழக்குகள் 694 எனத் தெரிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டின் இறுதியிலே 825 வழக்குகள் புலன் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
2020ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் கூடுதலான வழக்குகள் விசாரணையின்றி நிலுவையில் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சுமார் 40 சதவீத வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன், 186 வழக்குகள் தவறான தகவல், போதுமான ஆதாரம் திரட்ட முடியவில்லை எனக் காரணம் காட்டி காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.
காவல் துறையின் மெத்தனமான போக்கே வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்பதை என்சிஆர்பி அறிக்கை புலப்படுத்துகிறது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளே இல்லாத மாநிலம் என்ற பெருமையைத் தமிழ்நாட்டுக்கு உருவாக்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.








