கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை விடுதலை செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய போர்க் கப்பலின் முக்கிய அலுவலராக செயல்பட்ட கடற்படை அதிகாரி உள்பட 8 பேர் கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்கனாலஜிஸ் & கன்சல்டன்ஸி சர்வீசஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் கத்தாரின் ஆயுத படைகளுக்கு பயிற்சி மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளை வழங்கி வந்தது.
இதனிடையே கத்தாரில் இஸ்ரேல் நாட்டுகாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கேப்டன் நவ்தேஜ் சிங்க் கில், வீரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஸ்ட், அமித் நாக்பால், புரந்தேடு திவாரி, சுகுணாகர் பகலா, சஞ்சீவ் குப்தா, ராகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் ஜாமீன் கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர்கள் மீது இஸ்ரேல் நாட்டிற்கு கத்தாரின் உளவு தகவல்களை வழங்கியதாக குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் முன்வைத்து இந்த தண்டனையை வழங்கியது.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
https://twitter.com/DrSJaishankar/status/1718845462357406162
“கத்தாரில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். இந்த வழக்குக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என உறுதியளித்தேன். அந்தக் குடும்பங்களின் கவலை மற்றும் வலிகளை முழுமையாகப் பகிர்ந்து கொண்டேன். இந்திய வீரர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.








