போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை-தமிழக காவல் துறை

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கஞ்சா விற்பனை…

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாமல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் சில வரையறுக்கப்பட்ட மருந்துகளை போதைக்காக பயன்படுத்த வேண்டிய சட்டவிரோதமாக கடத்தல் மற்றும் விற்பனை செய்வது சம்பந்தமாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் போதைக்காக பயன்படுத்த வேண்டிய மருத்துகளை பேருந்தில் கடத்தி வருவதாக சிறப்பு தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை செய்யப்பட்டது.

இதில், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஷேக் அபுதாகீர் மகன் முகமதுமீரான் மற்றும் அழகுமுத்து மகன் மாணிக்கம் ஆகியோரை பிடித்து அவர்கள் வசமிருந்த மருந்துகள் சம்பந்தமாக விசாரணை செய்ததில், மருத்துவத் துறையில் வரைமுறைப்படுத்தப்பட்டு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஊக்க மருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்ததாகவும், அதிக லாபத்திற்கு இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மக்களின் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய மருந்துகளை உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக தவறான வழியில் சமுதாயத்தை சீர்குலைக்கும் எண்ணத்தோடு லாப நோக்க அடிப்படையில் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி தவறான வழியில் அழைத்துச் செல்லும் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் செய்பவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் கடுமையாக எச்சரித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.