படப்பிடிப்பு தளத்தில் விபத்து; நடிகர் விஷாலுக்குக் காயம்

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டதால், மாலை நேர படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.  ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் லத்தி. இதன் படப்பிடிப்பு சென்னை,…

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டதால், மாலை நேர படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் லத்தி. இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் இரவு, பகலாக நடந்து வருகிறது. ஏற்கனவே, இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20 நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30 நாட்கள், ஸ்டண்ட் காட்சி பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைப்பில் புது இயக்குநர் வினோத்குமார் டைரக்‌ஷனில் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. பாழடைந்த பில்டிங்கில் படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்குக் கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு ரத்தானது. பிறகு கேரளாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சி சென்னையில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்ற நிலையில், இரவு பகலாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறார். கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் திடீரென அதிர்ச்சியாகிறார். 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தித் தாக்க ஆரம்பிக்க, தைரியமாகக் கீழே இறங்கி அவர்களை அடித்துத் தாக்கிக் கொண்டு கைதியைப் பிடித்துச் செல்கிறார். இந்த காட்சியில், 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிக்கொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாகக் காலில் நிஜமாகவே அடி விழுந்துள்ளது. அப்போது துடிதுடித்து கீழே விழுந்துள்ளார் நடிகர் விஷால்.

அண்மைச் செய்தி: ‘மீண்டும் அச்சுறுத்தும் கொரோனோ’

உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில், எலும்பு முறிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, பிசியோ செய்தால் போதும் என மருத்துவர் சொல்லி இருப்பதாகவும், தொடர்ந்து பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை மீண்டும் பரிசோதிக்கப்பட்டு வலி இல்லையென்றால் மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. இதனால், மாலை நேரப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.