சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பதற்றத்தில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளிய இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சேலம் ஐந்து ரோடு அடுத்துள்ள நரசோதிபட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிடக் கலை நிபுணரான அஜித் குமார். இவரது சகோதரி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது சகோதரியை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற அஜித்குமார் பதற்றத்தில் மேல்பால சாலையில் அமைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தடுப்புகளை இடித்து தள்ளியுள்ளார். காரை தடுத்து நிறுத்திய காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு சகோதரியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த அஜித்குமார், பிறகு மீண்டும் காவலர்களிடம் வந்து விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.







