முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

தோல்வியிலும் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றி


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

குஜராத்தில் ஆளுங்கட்சியாகவோ அல்லது பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்திலோ வராவிட்டாலும், அங்கு கால் பதித்த முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இதன் மூலம் தேசிய கட்சி என்கிற தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை ஆம் ஆத்மி பெற உள்ளது. 

கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி நிறுவப்பட்ட ஆம் ஆத்மி,   10 ஆண்டுகளில் இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.  கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட ஆம் ஆத்மி, முதல் தேர்தலிலேயே அதிக இடங்களை வென்ற கட்சியாக உருவெடுத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றிருந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. கட்சி தொடங்கிய ஒரு வருடத்திற்குள் டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மியை நாடெங்கிலும் வியப்போடு பார்த்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2015ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை  தேர்தலில் 70க்கு 67 இடங்களில் வென்று தனது அசாத்திய பலத்தை நிரூபித்தது ஆம் ஆத்மி. இதனையடுத்து பிற மாநிலங்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த வியூகங்களை வகுத்தது. பஞ்சாபில் அரியணை ஏற வேண்டும் என்கிற தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து குஜராத்தின் மேல் ஆம் ஆத்மியின் பார்வை விழுந்தது. அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள சுமார் 6 மாதத்திற்கு முன்பாகவே பிரச்சாரத்தை தொடங்கியது. தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பாக குஜராத்தில் முகாமிட்டு வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால். குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ்  இருந்தாலும், பாஜகவிற்கு மாற்று தாங்கள்தான் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் ஆம் ஆத்மி அதிரடி பிரச்சார வியூகங்களை அமைத்தது. பஞ்சாபில் பிரபல நகைச்சுவை நடிகரான பகவந்த் மான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது நல்ல பலன்கொடுத்ததால், குஜராத்திலும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அம்மாநிலத்தில் பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பான விவாதங்களை நடத்தி மக்களிடையே நன்கு அறிமுகமாகியிருந்த மூத்த ஊடகவியலாளரான இசுதான் காத்வி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படிருந்தார்.

இப்படி பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்ட நிலையிலும் குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அங்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளிலேயே ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. மதியம் 2 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 6 இடங்களில் மட்டுமே ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.

எனினும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் புதிய அந்தஸ்தை ஆம் ஆத்மிக்கு கொடுத்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வராவிட்டாலும் குஜராத்தில் களம் இறங்கிய முதல் சட்டப்பேரவை தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. மதியம் 2மணி நிலவரப்படி 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. ஒரு மாநிலத்தில் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு குறைந்தது 6 சதவீத வாக்குகளை  பெற்று குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு இந்த இரண்டு நடப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி மாறும்.

ஒரு கட்சி 4 மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டால் அந்த கட்சியை தேசியக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். ஆம் ஆத்மி ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா, ஆகிய மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது குஜராத்திலும் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதன் மூலம்,  ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி என்கிற அங்கீகாரம் கிடைக்கும். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு இந்த அங்கீகாரம் தங்களுக்கு உற்சாகமாகவும், ஊக்கமாகவும் அமையும் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ஏற்கனவே, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பட்டியலில் ஆம் ஆத்மியும் இணைகிறது.

.-எஸ்.இலட்சுமணன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயம் ரவி & இயக்குநர் விக்னேஷ் சிவன்

Web Editor

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

EZHILARASAN D

குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Vandhana