ஆடி அமாவாசை; ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை

தமிழ்நாட்டில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆற்றங்கரைகளில் கூடும் பொதுமக்கள், புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது…

தமிழ்நாட்டில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆற்றங்கரைகளில் கூடும் பொதுமக்கள், புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு, கோயில்களில் வழிபடுவதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம், திட்டக்குடி சாலை, கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

மதுரையில், வைகை ஆற்றின் கரையில், மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொற்ப அளவில் பொதுமக்கள் திரண்டு, புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து ஆற்றங்கரை பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திருச்சி-ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், காவிரி ஆ ற்றில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மா மண்டபம் பகுதி, காவிரி படித்துறை ஆகிய பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. காவிரி ஆற்றில், நீர் வரத்து அதிகரித்துள்ளதால், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

சென்னையில், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினமான இன்று பலர் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, கோயில்களுக்கு வெளியே, முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.