நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். பொதுவாகவே ஆடி மாதத்தை ஆன்மிக மாதமாகவே கடைப்பிடிப்பது வழக்கம். இந்த மாதம் முழுவதுமே அம்மன் வழிபாடு அனைத்து ஆலயங்களிலும் களைகட்டும். ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என்று பல விழாக்கள் கொண்டாடப்படும். இவை தவிர அனைவரது வீடுகளிலும் அம்மனுக்குக் கூழ்வார்த்து வழிபாடு செய்வதும் இந்த மாதத்தில்தான்.
இப்படிப்பட்ட புனிதமான மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில், ஆடி அமாவாசை, இந்த முறை ஜூலை 17 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய இரண்டு நாட்களில் வருகிறது. இதுபோன்று இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தை அதிக மாதம் என்பார்கள். அதிக மாதங்கள் அனைத்துமே முன்னோர்கள் வழிபாட்டுக்கானவை. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.
ஆடி அமாவாசை நாளில், அதிகாலையிலேயே எழுந்து, காலையில் வழக்கம் போல் செய்ய வேண்டிய வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவர். அதாவது இம்மண்ணுலகை விட்டு சென்ற தன் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி, யாருமில்லாமல் ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
இதனையொட்டி தென் மாவட்டங்களில் மிக முக்கியமான பூச்சந்தையாக விளங்கக் கூடியது மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த சந்தையில் இருந்து தான் வெளிநாடுகள் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாக பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ 500 ரூபாய்க்கும், முல்லை பூ 300 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 400 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








