தனக்கு தெரியாத செல்போன் எண்களில் இருந்து தவறான குறுஞ்செய்திகள் வருவதாக ட்விட்டரில் உதவி கோரிய இளைஞருக்கு, தமிழ்நாடு காவல்துறை பதிலளித்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த மாரிஸ்வரன் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார். அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அதில் ஒரு பெண் ஆடைகளின்றி இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே அந்த அழைப்பை துண்டிவிட்டார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு மாரிஸ்வரன் அந்த பெண்ணிடம் வீடியோ கால் பேசுவது போன்ற புகைப்படங்கள் தெரியாத எண்ணில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. உடனே அந்த எண்ணையும் அவர் பிளாக் செய்து விட்டார்.
ஆனால், மீண்டும் மர்மநபர்கள் வேறு எண்ணில் இருந்து மாரிஸ்வரனுக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, என்ன செய்வது என தெரியாத அவர், ட்விட்டர் மூலம் தமிழ்நாடு காவல்துறையினரை டேக் செய்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், தான் துபாயில் வேலை செய்கிறேன் என்றும் தனக்கு தெரியாத செல்போன் எண்களில் இருந்து தவறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரது ட்விட்டர் பதிவை பார்த்ததும், தமிழ்நாடு காவல்துறை மாரிஸ்வரனுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளது. அதில், இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு தங்கள் புகாரை http://cybercrime.gov.in இல் பதிவு செய்யவும் என குறிப்பிட்டுள்ளது. ட்விட்டர் மூலம் புகார் அளித்தவருக்கு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு காவல்துறை நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








