நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் தட்டப்பள்ளம் நெடுஞ்சாலையில் காட்டு யானை உலா வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்கும் படி வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள
தட்டப்பள்ளம் பகுதியில், பகல் நேரங்களில் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு
யானையால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். மேலும், மேட்டுப்பாளையம்
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குஞ்சப்பனை, முள்ளூர், மாமரம் மற்றும் தட்டப்பள்ளம்
பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது.
இதனால், சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைக்கூட்டங்கள் மலைப்பகுதியில்
உள்ள தேயிலை, காஃபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில், தட்டப்பள்ளம்
பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று போக்குவரத்திற்கு இடையூறாக
நீண்ட நேரம் சாலையில் நின்றுள்ளது. இந்த காட்சியை அவ்வழியாக பயணித்த வாகன
ஓட்டிகள், கைப்பேசி மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது
தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், பலாப்பழம் சீசன் முடியும் வரை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து காணப்படும் என்பதால், மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் தேயிலை, காஃபி தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் பொதுமக்கள், மிகவும் கவனமுடன் சென்று வர வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து, காட்டு யானைகள் உலா வந்தால் யானைகளை விரட்ட, உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
கு. பாலமுருகன்







