பதான் படம் பார்க்க மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பீகார் வரை நண்பரைத் தோளில் சுமந்து வந்த ஷாருக்கான் ரசிகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது. சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது.
நீண்ட நாளைக்குப் பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரைக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான பதான் வசூலை வாரிக்குவித்து வருகிறது. படம் வெளியான மூன்று நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஷாருக்கான் ரசிகர் ஒருவர், தனது மாற்றுத்திறனாளி நண்பர் ஒருவரை முதுகில் சுமந்தபடி பதான் திரைப்படம் பார்க்க வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவரும் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள சம்சி பவன் டாக்கீஸ் திரையரங்கில் பதான் படத்தைப் பார்ப்பதற்காகப் பீகாரில் உள்ள பாகல்பூரில் இருந்து தனது நண்பரின் தோளில் சுமந்த படி வந்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.







