பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (34). அதே பகுதியில் பாட்டில்களை சேகரித்து கடைகளில் போடும் வேலை செய்து வந்தார்.
இன்று காலை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தபோது அங்கு கீழே அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயர் தனியாக கீழே இருப்பதாக நினைத்து எடுக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இது குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத் பேட்டை போலீசார் இறந்து கிடந்த வசந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த பகுதியில் அதிகளவில் கண்டெய்னர் லாரிகள் செல்வதால் மின்சார கம்பிகளை அருத்துவிட்டு சென்று விடுவதாகவும் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்தாலும் கண்டெய்னர் லாரிகள் அதிக அளவில் வருவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் வயர் அருந்து கிடப்பது தெரியாமல் கீழே உள்ளதாக நினைத்து எடுக்க நினைத்த போது மின்சாரம் தாக்கி இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலந்து சென்றனர்.








