காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீண்டும் ஒற்றுமை பயண யாத்திரையை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை மேற்கொள்ள உள்ள நிலையில், அவர் தற்போது தனது முடி அளவை குறைத்து, தாடியை அளவாக வைத்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ராகுல்காந்தி, இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் கேரளா, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக பயணிக்க துவங்கிய இவர், அங்கு உள்ள தலைவர்களையும் பொதுமக்களையும்
சந்தித்து தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட கன்னியாகுமரியில் இருந்து 150 நாட்கள் 4,080 கி.மீ தொலைவு நடந்தே காஷ்மீர் வரை சென்றடைந்த ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ந் தேதி இந்த பாதயாத்திரையை நிறைவு செய்தார்.
சுமார் 5 மாதங்கள் நடந்த இந்த பாதயாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கிடைத்துள்ளதாக தொண்டர்கள் எண்ணியதால், தற்போது 2-வது பாதயாத்திரையை விரைவில் ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன் படி ராகுல் காந்தியின் 2-வது ஒற்றுமை யாத்திரையானது இந்தியாவின் மேற்கு
எல்லையில் உள்ள குஜராத்தின் போர்பந்தரில் துவங்கி கிழக்கு எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை நடைபெறக் கூடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், முந்தைய பாதயாத்திரைக்கு பிறகு பட்ஜெட் கூட்ட தொடர், கட்சி மாநாடு என அடுத்தடுத்த நிகழ்வுகளில் ராகுல்காந்தி கலந்து கொண்டதால் அவரது முகத்தில் வளர்ந்த தாடி மற்றும் முடியை சரி செய்யாமல் வித்யாசமான தோற்றத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவர் புதிய பரிமாண தோற்றத்திற்கு மாறியுள்ளார். இந்த முறை தாடியை முழுவதுமாக எடுக்காமல் ஓரளவு வைத்துக்கொண்டு, தலை முடி அளவை குறைத்து தற்போதுள்ள இளம் வயதினர் தோற்றத்தில் பேப்பர் அண்ட் சால்ட் தலை முடியுடன் காட்சியளிக்கிறார் . இந்த புதிய தோற்றம் காங்கிரஸ் தொண்டர்கள் பலரையும் கவர்ந்துள்ளளது.
- பி.ஜேம்ஸ் லிசா









