“இந்த வருடம் நிறைய கெடுபிடி” – விஜய் பிறந்தநாளில் என். ஆனந்த் வேதனை!

தவெக தலைவர் விஜயின் பிறந்தநாளான நலத்திட்ட உதவிகளை வழங்க விடாமல் போலீசார் தடுப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று (ஜூன் 22) தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை ஒட்டி தவெக தொண்டர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஈஞ்சம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தங்க மோதிரம் அணிவித்தார்.

பின்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த என். ஆனந்த் அவர் பேசியதாவது,

“உளுந்தூர்பேட்டையில் தவெக தொண்டர்களை தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தவெக தலைவர் விஜயின் பிறந்தநாளை தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறோம். கோயிலுக்கு வெளியில் அன்னதானம் வழங்கக்கூடாது என்று போலீசார் தடுக்கிறார்கள். அதனை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம். தவெக தலைவர் விஜயின் பிறந்தநாளான இன்று மட்டுமல்லாமல்லாமல் ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.

ஆனால் இந்த வருடம் போலீசார் நலத்திட்ட உதவிகளை வழங்க விடாமல் தடுக்கின்றனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். நாங்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுதான் தமிழ்நாடு அரசு. உளுந்தூர்பேட்டையில் தவெக தொண்டர்களை தாக்கியது திமுக கட்சியினர்தான். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.