“நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணம்” என மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர்.
அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் இந்த மசோதா பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இதனை அடுத்து மாநிலங்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துனர். இதனை அடுத்து 10 மணி நேரத்திற்கு மேலாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்ற நிலையில், மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ’நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்த மசோதா அதன் பிறகு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது..
” மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு வாக்களித்த அனைத்து மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் நன்றி. இந்தியப் பெண்களுக்கு வலுவான பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளிக்கும் சகாப்தம் தொடங்கியுள்ளது. இதனை வெறும் சட்டமாக கருதக்கூடாது. நாட்டை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு இது ஒரு அஞ்சலி. அவர்களின் பங்களிப்புகளால் இந்தியா வளப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் வலிமை, தைரியம் மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மை ஆகியவற்றை போற்றும் வகையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஜனநாயகப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணம்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1704904798401872144







