5 ஆயிரத்து 885 பேர் பங்கேற்று உருவாக்கிய பறக்கும் தேசியக் கொடி உலக கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சண்டிகரில் மனிதர்களைக் கொண்டு பறக்கும் தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. சண்டிகர் பல்கலைக்கழகம் மற்றும் சண்டிகரில் உள்ள என்ஐடி ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து இந்த பறக்கும் தேசியக் கொடியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
5 ஆயிரத்து 885 பேர் ஒன்று சேர்ந்து பறக்கும் தேசியக் கொடியாக மாறினர். கொடிக் கம்பம் மற்றும் காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களைக் கொண்ட மூவர்ணக் கொடி என அனைத்தும் மனிதர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதிக மனிதர்களைக் கொண்டு உருவாக்கிய வடிவம் எனும் உலக கிண்ணஸ் சாதனையை இந்த பறக்கும் தேசியக் கொடி படைத்துள்ளது.
உலக கிண்ணஸ் சாதனைக்கான அதிகாரப்பூர்வ நீதிபதி ஸ்வப்நில் தங்காரிகர் நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டு உலக கின்னஸ் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் அளித்தார்.
இதற்கு முன் ஐக்கிய அரபு எமிரேட்சில் மேற்கொள்ளப்பட்ட மனித வடிவமே உலக கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கை கொண்டதாக இன்றைய நிகழ்ச்சி இருந்ததால், இது புதிய உலக கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய கின்னஸ் உலக சாதனை படைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஸ்வப்நில் தங்காரிகர் தெரிவித்தார்.