முதலமைச்சரின் பிறந்தநாளில் ஒரு குட் நியூஸ் – ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் கிடைத்தது ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு, ரேஷன் அட்டை இல்லாமல் நிவாரணம் பெற விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு, ரேஷன் அட்டை இல்லாமல் நிவாரணம் பெற விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.  மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்றன. பெரும்பாலான பகுதிகள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சில பகுதிகளில் மழைநீர் வடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ச்சியாக மீட்புப் பணிகள், சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நியாய விலைக் கடைகளின் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டது. ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை அடுத்து, ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் பெற விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதையும் படியுங்கள் : 71வது பிறந்தநாள் – தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!

இதுகுறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று, தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் விடுபட்டவர்களுக்கும் நிவாரண தொகை ரூ.6,000, அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.