ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது என தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அகமதாபாத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாயாரைப் பார்த்தார். அங்கிருந்த மருத்துவர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் விசாரித்து அறிந்தார்.
இதையடுத்து அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.
https://twitter.com/narendramodi/status/1608622116295045121
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும், என் தாயிடம் உணர்ந்துள்ளேன்.
100வது பிறந்த நாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் என் நினைவில் இருக்கிறது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.








