நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான 63-ஆவது
பழக்கண்காட்சியை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக
சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை காலம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63 ஆவது
பழக்கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. இந்த பழக்கண்காட்சியை, நீலகிரி
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
மேலும், பூங்காவில் 3 டன் பழங்களை கொண்டு ஆறுக்கும் மேற்பட்ட உருவங்கள்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பலா பழங்களை கொண்டு பிரம்மாண்டமான
நுழைவு வாயில், அன்னாசி பழங்களால் ஆனா பிரம்மாண்ட அன்னாசி பழம்,
ஆரஞ்சு பழங்களால் ஆன பிரம்மிட், பழக்கூடை, திராட்சையால் செய்யப்பட்ட
அணில் மற்றும் மாதுளை பழங்களால் செய்யப்பட்ட மண்புழு ஆகியவை
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தோட்டக்கலைத்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு
பழங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும்
இந்த பழக்கண்காட்சியை, ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கு. பாலமுருகன்







