“ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும்” – திருமாவளவன் எம்.பி.,

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைக் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், “அரக்கோணம் இரட்டைக் கொலை…

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைக் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், “அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையில் காவல்துறை ஒரு சார்பாக செயல்பட்டு உள்ளது, வழக்கில் புலனாய்வு விசாரணை நடத்தப்படவில்லை, இவ்வழக்கை தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயக்கும் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும். இக்கொலை ஒரு திட்டமிட்ட சாதீய படுகொலை. சமாதான பேச்சுக்கு அழைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தலையொட்டியே இரட்டை கொலை நடைபெற்றுள்ளது.” என்றும்

“பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு வன்கொடுமை வழக்குகளில் வழங்க வேண்டிய இழப்பீடுகள் இன்னும் வழங்கவில்லை. இழப்பீடுகளை போராடி பெற வேண்டி உள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறவில்லை” என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சரஸ்வதி கொலை குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “மக்கள் பிரச்சினைகளை ராமதாஸ் திசை திருப்பி பேசி வருகிறார். சரஸ்வதி கொலையை ராமதாஸ் திசை திருப்பி அவதூறு பரப்பி வருகிறார். தமிழகத்தில் நடைபெறும் காதல் பிரச்சினைகளுக்கு கட்சிகள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சரஸ்வதி படுகொலைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. விசிகவுக்கு எதிராக தொடர் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று விசிக போராடும். ராமதாஸ் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும்.” என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.