குற்றால அருவிகளில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!…

குற்றால அருவிகளில்,  ஐயப்ப பக்தர்களின் வருகையால் கூட்டம் அலைமோதியது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து…

குற்றால அருவிகளில்,  ஐயப்ப பக்தர்களின் வருகையால் கூட்டம் அலைமோதியது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் அருவியில் ஆனந்த குளியலிட்டு வந்தனர். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்போது போலீசார் தடை விதித்துள்ளனர்.

இச்சூழலில், குற்றாலம் அருவிகளில், ஐயப்ப பக்தர்களின் வருகையால் கூட்டம் அலைமோதியது. ஆண்டுதோறும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் குற்றாலத்திற்கு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகளில் ஐயப்ப பக்தர்களின் வருகையால் சீசன் களைகட்டியுள்ளது.

மேலும், வெள்ளப்பெருக்கானது குறைந்து தண்ணீர் வரத்து சீரானால் தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.