சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளன. தலையில் இருக்கும் நீரை வெளியேற்றும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெற்றோர் குழந்தையை அனுமதித்தனர்.
அப்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் திரவ உணவை செலுத்துவதற்காக வலது கையில் ஊசியை பொருத்தினர். இதில் ரத்த ஓட்டம் தடைபட்ட கருஞ்சிவப்பாக மாறிய குழந்தையின் வலது கையை மருத்துவர்கள் அகற்றினர். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு நடத்திய பரிசோதனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.







