உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியும் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் விளைநிலங்கள் பாலைவனமாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உரிய நீரை உடனடியாக பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 113 பக்கங்களை கொண்ட விரிவான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவின் சராம்சம் வருமாறு:
- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
- காவிரி ஆணையம் பாகுபாட்டோடும், ஒரு தலை பட்சமாகவும் செயல் பட கூடாது என உத்தரவிட வேண்டும்.
- உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடகா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
- ஜூன் மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரில் பாக்கியுள்ள 28.8 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும்.
- இந்த விவகாரத்தில் காவிரி நீர் ஆணையத்தையும் ஒரு எதிர் மனுதாரராக இணைத்து உரிய உத்தரவை ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும்.
- தற்போது 24 ஆயிரம் கன அடி நீர் விகிதம் தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
- அதேபோல இந்த மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கரநாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அதோடு, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு தனது மனு இணைத்து தாக்கல் செய்துள்ளது.







