கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த கார் திடீரென
தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் அணைக்கரையை அடுத்த வரையனூரை
சார்ந்தவர் லைஜ்ஜூ. பெங்களூரில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் மேலாளராக
பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான Ford figo காரில் இன்று நள்ளிரவு
1.30 மணியளவில் வீட்டிலிருந்து அவர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு
புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூரை அடுத்த
ஆட்டையாம்பரப்பு அருகே வந்து கொண்டிருந்த போது, காரின் முன்பக்கம் என்ஜின்
பகுதியிலிருந்து புகை வருவதை அறிந்த அவர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு
கீழே இறங்கி விட்டனர். தீயை அணைக்க அருகில் தண்ணீர் எடுக்க அவர்கள் முற்பட்ட
போது, தீ மளமளவென பிடித்து எரிய ஆரம்பித்தது.
தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள்
கொண்டு வந்தனர். அதற்குள் காரின் முன்பகுதி மற்றும் உட்புற பகுதிகள் முழுவதுமாக
எரிந்து நாசமாயின. இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கு. பாலமுருகன்







