குற்றாலம் பேரருவி அருகே பிடிபட்ட 12 அடி ராஜநாகம்; சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரருவி அருகே கொடிய விஷமுள்ள 12 அடி ராஜநாகம் பிடிபட்டது. தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றால நாதர் கோவிலானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. குறிப்பாக, குற்றாலம்…

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரருவி அருகே கொடிய விஷமுள்ள 12 அடி ராஜநாகம் பிடிபட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றால நாதர் கோவிலானது மேற்கு தொடர்ச்சி மலை
அடிவாரத்தில் உள்ளது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியின் மிக அருகாமையில் உள்ள இந்த குற்றால நாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குற்றால அருவியில் குளித்துவிட்டு குற்றால நாதர் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில், குற்றால நாதர் கோயில் அலுவலக வளாகத்தில் மிகப்பெரிய பாம்பு
ஒன்று புகுந்துள்ளதாகப் பக்தர்கள் சிலர் பார்த்து கோயில் ஊழியர்களிடம்
தெரிவிக்கவே, உடனே கோயில் ஊழியர்கள் குற்றாலம் வனத்துறையினர் மற்றும்
தீயணைப்புத் துறையினருக்குக் கொடுத்த தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின், அடிப்படையில் விரைந்து வந்த குற்றாலம் வனத்துறையினர் மற்றும்
தென்காசி தீயணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி சுமார்
12 அடி நீளமுள்ள அரிய வகை கொடிய விஷம் பொருந்திய வெள்ளை இன ராஜநாகத்தைப்
பிடித்தனர்.

தொடர்ந்து, பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்
உள்ள அடர்வனப் பகுதிக்குக் கொண்டு சென்று விட திட்டமிட்டுள்ள நிலையில், தினம்
தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றால நாதர் கோயில்
வளாகத்தில் 12 அடி நீளமுள்ள அரியவகை ராஜநாகம் பிடிபட்டுள்ள சம்பவம் பொதுமக்கள்
மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.