நாடு முழுவதும் 8 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சமூக நீதித்துறையின் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோட் உள்ளிட்ட 8 ஆளுநர்களை கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஏற்படவிருக்கும் மாற்றத்தின் முன்னோடியாக இந்த நியமனங்கள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதன்படி இன்று குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக நீதித்துறையின் மத்திய அமைச்சரும், பாஜகவின் ராஜ்யசபாவின் தலைவருமான தாவர்சந்த் கெஹ்லோட் கர்நாடகாவின் ஆளுநராகவும், ஹரி பாபு கம்பம்பதி மிசோரம் மாநில ஆளுநராகவும், மங்குபாய் சாகன்பாய் படேல் மத்தியப் பிரதேச ஆளுநராகவும், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இமாச்சல பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிசோரம் ஆளுநராக இருந்த பிஎஸ். ஸ்ரீதரன் பிள்ளை கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா ஆளுநரான சத்யதேவ் நாராயன் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும், திரிபுரா ஆளுநரான ரமேஷ் பைஸ் ஜார்கண்ட் ஆளுநராகவும் இமாச்சல பிரதேச ஆளுநரான பந்தாரு தத்தாத்ரய ஹரியானா ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் சில மாற்றங்கள் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.







