மத்திய அரசிடம் இருந்து இந்த மாதம் கால்நடை தடுப்பூசிகள் 60 லட்சம் டோஸ்கள் வர உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குனரகத்தில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் கார்த்திக் ஐஏஎஸ், கால்நடை
பராமரிப்புத்துறை ஆணையர் ஞானசேகரன் ஐஏஎஸ் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் துறையின் செயல்பாடுகள் குறித்தும் துறையில் இதுவரை அறிவித்திருக்கிற சட்ட திட்டங்கள் குறித்தும் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், முதலமைச்சர் உத்தரவின் படி நேற்று மீன்வளத்துறை ஆய்வு கூட்டமும் இன்று கால்நடைத்துறை ஆய்வு கூட்டமும் நடைபெற்றது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் பசுந்தீவன உற்பத்தி அதிகப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. ஏற்கனவே பல மாநிலங்களில் தோல் கழலை நோய் கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இருக்கும் இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க சொன்னார் அதன்படி எங்கெல்லாம் பாதிப்பு இருக்கிறதோ அங்கு எல்லாம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது ஏறக்குறைய நமக்கு
சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியது போல் திட்டமிட்டு இந்த ஆண்டும் அனுமதி வாங்கி ஜல்லிக்கட்டு நடக்கும் போது காளைகளுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் செயல்படுவோம்.
மத்திய கால்நடை துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியது குறித்து பேசிய
அவர், தமிழக முதலமைச்சர் கோமாரி நோய்க்கான தடுப்பூசி மருந்து கிடைக்காத காரணத்தால் கடிதம் எழுதி இருந்தார். தற்போது, வர வேண்டிய 90 லட்சம் டோஸ்களில் 60 லட்சம் டோஸ்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என்று மத்திய கால்நடைத்துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது என்றார். தமிழகத்தை பொறுத்தவரை நோய்த்தாக்கம்
பதிவாகவில்லை என்றும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள்
கையிருப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களில் கால்நடைகள் மற்றும் பறவைகள்இருந்து வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு எந்தவித நோய் தொற்றும் இல்லாத வகையில் தான் அனுமதிக்கப்படுகிறது என்றார்.







