பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60% நிறைவு: அமைச்சர் நேரு

பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு…

பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரூ. 779 கோடியில் பில்லூர் குடிநீர்த் திட்டமும்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சிப் பகுதிக்கு கூடுதலாக 178 எம். எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும். மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், அங்கிருந்து குழாய் மூலம் கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் தண்டிபெருமாள் கோவில் அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளதால் 3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ. 61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையைக் குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி 60% முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கட்டஞ்சி மலை சுரங்கப்பாதை, நீரேற்று நிலையங்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கேஎன்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தேன். ‘பில்லூர் குடிநீர்த் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  178 எம்.எல்.டி, குடிநீர் கோவைக்கு வழங்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து 98 எம்.எல்.டி தண்ணீருக்கு பதில், 39 .எம்.எல்.டி குடிநீர் குறைவாக தான் தருகின்றனர். அதை சரி செய்து அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். பில்லூர் குடிநீர்த் திட்ட பணிகள் நிறைவு பெற்றால் 178 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும். 2 மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. பில்லூர் அணையின் சேற்றை அகற்ற துறை அமைச்சரிடம் பேசி தூர் வாரப்படும். தற்போது பில்லூர் குடிநீர்த் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.