பணமோசடி வழக்கில் கைதான ஆம்ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் ஆம்ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஜாமின் கோரி அவர் பல முறை தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில், அவர் டெல்லி தீனதயாள் உபாத்யாய மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சிறையில் குளியலறைக்கு சென்றபோது, அவர் திடீரென மயக்கம் அடைந்து விழுந்து காயமடைந்ததாகவும், இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தியேந்திர ஜெயினுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக நிபந்தனைகளின் அடிப்படையில் 6 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சத்தியேந்திர ஜெயின் டெல்லியை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும், மருத்துவ ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, வரும் ஜூலை 11ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.