6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை அடுத்து மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்புகள் அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. எனினும், மாணவர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனக் கூறினார்.
கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே பள்ளிகளை திறப்பது குறித்து அடுத்த கட்டமாக முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.








