சென்னையை அடுத்த பொத்தேரி பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே ஜிஎஸ்டி சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி பொத்தேரி அருகே சாலையை கடக்க முயன்ற மூன்று இரு சக்கர வாகனங்களின் மீது அதிவேகமாக மோதியது.
இதனை அடுத்து டிப்பர் லாரி அங்கு இருந்த சென்டர் மீடியங்களில் மோதி , அதனை அடுத்து மரத்திலும் மோதியது. மரத்தில் மோதியதில், மரமும் முறிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பவானி (40), மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜஸ்வந்த் (23) கார்த்திக் (24) மற்றும் பார்த்தசாரதி (40) என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







